‘இல்லத்தரசி திட்டம்’ என்ற பெயரில் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்கள் வினியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ.8,000 கூப்பன்கள் வழங்கப்பட்டு, அதன்மூலம் பெண்கள் விருப்பமான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கலாம் என குறிப்பிடப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி துணைச் செயலர் ஆர்.ஏ.எஸ். செந்தில்வேல் தாக்கல் செய்த மனுவில், கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு, கும்பகோணம், அண்ணாநகர் உள்ளிட்ட பல தொகுதிகளில் முதல்வர் புகைப்படம் மற்றும் வரிசை எண்ணுடன் கூப்பன்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவ்வாறு கூப்பன் வழங்குவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றம் எனவும் மனுவில் வாதிடப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.





