புதுடில்லி: டில்லி என்.சி.ஆர். பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தவும், கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டதாக கூறப்படும் பாகிஸ்தான் உளவுத் தொடர்புடைய வலையமைப்பைச் சேர்ந்த இருவரை டில்லி போலீஸ் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பெரிய சதி இதனால் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் என கூறப்படும் ஷாசாத் பாத்தி உத்தரவின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போலீசார் கூறினர். சமூக வலைதளங்கள் வழியாக இந்திய இளைஞர்களை ரகசியமாக ஆள் சேர்த்து, அவர்களை மூளைச் சலவை செய்து தாக்குதல்களுக்கு தயார்படுத்த முயற்சி நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. டில்லி என்.சி.ஆர். மட்டுமின்றி உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டதுடன், சமூக வலைதளங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. மத்திய பிரதேசம் குவாலியரைச் சேர்ந்த விவேக் பஞ்சாரா (19) ஏப்.16 அன்று கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்வீர் (21) ஏப்.18 அன்று டில்லியில் கைது செய்யப்பட்டார்.

போலீசார் கூறுகையில், என்.சி.ஆர். பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தாக்குதல் நடத்த தயாராக இருந்தபோது ராஜ்வீர் பிடிபட்டதாக தெரிவித்தனர். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் மற்றும் சதித் திட்டம் தொடர்பான வீடியோ/ஆடியோ பதிவுகள் உள்ள இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், ஷாசாத் பாத்தியின் நெருங்கிய கூட்டாளி என கூறப்படும் ராணா பாய் வழிகாட்டுதலின் பேரில் இருவரும் செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எளிதில் பணம் கிடைக்கும் என்ற வாக்குறுதியால் ஈர்க்கப்பட்டு அவர்கள் சேர்ந்ததாகவும், ஆமதாபாத், அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று சட்டவிரோதமாக ஆயுதங்கள் வாங்க முயன்றதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும், கைது நடவடிக்கை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.