விவோ மற்றும் ஐக்யூஓஓ ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து, போலி மென்பொருள் புதுப்பிப்பு செய்தி மூலம் தகவல் திருடும் சைபர் மோசடி நடக்கிறது என கேரள போலீசார் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த முறையில் வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் களவாடப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள சைபர் பிரிவு போலீசார் வெளியிட்ட அறிக்கையின்படி, பயனர்களின் திரையில் “மென்பொருள் புதுப்பிக்கப்பட வேண்டும்; அவசரம்” என்ற அறிவிப்பு தோன்றும் வகையில் மோசடி கும்பல் செயற்படுகிறது. அதை சொடுக்கினால் “OriginOS Update” என்ற பெயரில் ஒரு மென்பொருள் பதிவிறக்கம் ஆகும்.

அது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் போலவே தோன்றினாலும், நிறுவியவுடன் போனின் கட்டுப்பாடு மோசடி கும்பலின் கைக்கு செல்லக்கூடும் என போலீசார் கூறினர். இதன் மூலம் வங்கி தகவல்களைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது.

தவறுதலாக இப்படியான இணைப்பை சொடுக்கியிருந்தால் உடனடியாக இணைய இணைப்பை துண்டிக்க வேண்டும் என்றும், வேறு ஒரு மொபைலை பயன்படுத்தி வங்கி மற்றும் சமூக வலைதள கடவுச்சொற்களை உடனே மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணம் இழந்தவர்கள் 1930 என்ற சைபர் உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.