இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் ஏப்.27 (திங்கட்கிழமை) கையெழுத்தாக உள்ளது. இது இருநாட்டு பொருளாதார உறவுகளில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு டிச.22 அன்று வெளியிடப்பட்டது. ஒப்பந்தத்தின் படி, இந்தியாவில் தயாராகும் அனைத்து வகை பொருட்களுக்கும் நியூசிலாந்தில் இறக்குமதி வரி பூஜ்ஜியமாக்கப்படும்.
மாறாக, நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் மரத்துண்டுகள், வைன், அவகோடா, புளூபெர்ரி உள்ளிட்ட சுமார் 95% பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் அல்லது முழுமையாக நீக்கப்படும். ஆனால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படாது.
மேலும், இந்திய மாணவர்களுக்கு ஆண்டுக்கு 5,000 நியூசிலாந்து விசாக்கள் வழங்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ரூ.1.86 லட்சம் கோடி அளவிலான அந்நிய முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், 140 கோடி நுகர்வோர் கொண்ட சந்தையை நியூசிலாந்து ஏற்றுமதியாளர்கள் அணுக முடியும் என கூறினார். வர்த்தக அமைச்சர் டோட் மெக்களே, ஏற்றுமதியாளர்களுடன் இந்தியா சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும், கிவி பழம், கடல் உணவுகள், இறைச்சி, தேன் போன்ற பொருட்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.





