திருவனந்தபுரம்: தமிழக சட்டசபை தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், கேரளாவில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளில் பணிபுரியும் தமிழக வாக்காளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தும். விடுப்பு எடுத்ததற்காக ஊதியத்தில் எந்தவித பிடித்தமும் செய்யக் கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தினக்கூலி அடிப்படையில் பணிபுரிவோர் மற்றும் ஷிப்ட் முறையில் பணிபுரிவோருக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் பிரிவு 135(பி) அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் நிறுவன உரிமையாளர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் என கேரள அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.





