இணைந்து பிரசாரம் செய்யாத விவகாரத்தை ‘பெரிதாக்க வேண்டாம்’

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இணைந்து பிரசாரம் செய்யாததை தேவையற்ற வகையில் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுலின் பிரசார திட்டமிடல் மற்றும் மாநிலத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாகவே இருவரும் இணைந்து பிரசாரம் செய்யவில்லை என்றும், இதை விவாதமாக மாற்ற வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக பிரதமர் மோடி கூறும் கருத்துகளை விமர்சித்த கார்கே, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை என்பதை அறிந்தும் மசோதாக்களை கொண்டு வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். தொகுதி மறுவரையறை விவகாரத்தை மகளிர் இடஒதுக்கீடு எனக் கூறி மக்களை திசைதிருப்ப முயல்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், வடக்கு–தெற்கு எனப் பிரித்து பார்க்கும் அரசியல் நடக்கிறது என்றும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாகவும் அவர் கூறினார். ‘மோடி ஒரு பயங்கரவாதி’ என்ற தனது கருத்து தனிப்பட்ட முறையில் அல்ல; அந்தச் சூழலில் கூறியது என்றும் விளக்கினார்.

காங்கிரஸ் தலைமை அனுமதியுடன் த.வெ.க. தலைவர் விஜயை சந்தித்ததாக பிரவீன் சக்கரவர்த்தி கூறியதாக வெளியான தகவல் குறித்து, அவர் தன்னை சந்திக்கவே இல்லை; அப்படியிருக்க தலைமை அனுமதி எப்படி கிடைக்கும் என்று கார்கே கேள்வி எழுப்பினார்.