திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது பள்ளி மாணவி மீது நடந்ததாக கூறப்படும் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் (NCW) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் மூவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இத்தாக்குதல் இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலைகளை எழுப்புவதாகவும், இது மனித உரிமைகளின் கடுமையான மீறல் எனவும் ஆணையம் தெரிவித்தது. மேலும், இந்தச் செயலை ஆணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் தாமதமின்றி கைது செய்யவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளை வழங்கவும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆணையம் கூறியது.

மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 5 நாட்களுக்குள் தமிழக போலீசார் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.