இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியாத வகையில் விதிக்கப்பட்ட தடையை மே 24 வரை நீட்டிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு–காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அந்நாடு தடை விதித்தது.

இதற்கு பதிலடியாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 30 முதல் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது. பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் விமானப் பணியாளர்களுக்காக வெளியிட்ட அறிவிப்பில், இந்திய விமானங்கள் மற்றும் இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் அல்லது குத்தகைக்கு எடுத்த விமானங்கள், ராணுவ விமானங்கள் உள்ளிட்டவை பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை அமலுக்கு வந்து ஓராண்டு ஆகும் நிலையில், பல்வேறு சர்வதேச நாடுகளுக்குச் செல்ல இந்திய விமான நிறுவனங்கள் நீண்ட வழித்தடங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை 24ம் தேதி காலை 05:30 மணி வரை அமலில் உள்ளது; இதுவும் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.