புதுடில்லி: இந்தியாவில் புகையிலை பழக்கம் முழுமையாக ஒழிந்தால், 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலை கணிசமாக மேம்படும் என பிரிட்டிஷ் மருத்துவ இதழான பி.எம்.ஜெ. (BMJ) வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வை மும்பை டாடா சமூக அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) நொய்டா புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மேற்கொண்டன. 2022–23 தேசிய மாதிரி கணக்கெடுப்பில் பதிவான குடும்ப வருமானம், செலவு, வாழ்க்கைமுறை விவரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன.

நாடு முழுவதும் 2.61 லட்சம் குடும்பங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு செலவிடும் தொகை மற்றும் பிற மாதாந்திர செலவுகள் ஒப்பிட்டு, புகையிலை கைவிட்டால் ஏற்படும் நிதி பலன் கணக்கிடப்பட்டது.

அதன்படி, புகையிலை பழக்கத்தை நிறுத்தினால் கிராமப்புறங்களில் 11.64% குடும்பங்களுக்கும், நகர்ப்புறங்களில் 7.26% குடும்பங்களுக்கும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஏழை குடும்பங்களில் 12.4% மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களில் 16.8% வரை மேம்பாடு ஏற்படலாம்; இதன் மூலம் பலனடையும் குடும்பங்கள் 2 கோடிக்கும் அதிகம் என ஆய்வு கூறுகிறது.