ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு என்று முன்னாள் அமைச்சர் மற்றும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்புடன் தேர்தல் பணியாற்றி வருவதாகவும், வாக்காளர்கள் தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். தேர்தல் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றார்.

தோல்வி பயத்தில் அ.தி.மு.க.வினர் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள் என குற்றம்சாட்டிய அவர், கோவை தெற்கு அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியை உணர்ந்ததால் குறை கூறுவதாகவும் தெரிவித்தார். அமைதியான பகுதியை கலவரமாக மாற்றும் முயற்சிகள் பலிக்காது என்றார்.

தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள் என்ற தகவலை முழுமையாக மறுப்பதாக கூறிய செந்தில் பாலாஜி, இத்தகைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும், ஆதாரம் இருந்தால் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுவாக அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பறக்கும் படை, சி.ஆர்.பி.எப்., போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள நிலையில், ஓட்டுச்சாவடியை கைப்பற்றுவது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியை விமர்சித்த அவர், தோல்வி விரக்தியில் எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள் என கூறினார்.