சென்னை: வாக்குப்பதிவு நாளில் முழு விழிப்புடன் இருந்து, நமக்கு ஆதரவான ஒரு ஓட்டும் தவறாமல் பதிவாகும் வகையில் கண்ணியமாக பணியாற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ஐந்தாண்டு “திராவிட மாடல்” ஆட்சியின் சாதனைகள் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் பயன் தந்துள்ளதாகவும், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருப்பதாலும் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக கூட்டணிக்கு ஓட்டளிப்பது நேரடியாக பாஜவுக்கு ஆதரவாகும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும், பாஜ தலைமையிலான கூட்டணியை முறியடித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிப்பதே வாக்காளர்களின் உறுதியான முடிவு எனவும் அவர் தெரிவித்தார்.
எதிரிகள் பரப்பும் அவதூறுகளை மக்கள் புறந்தள்ளி “திராவிட மாடல் 2.0” ஆட்சி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திமுகவினர் காட்டிய அயராத உழைப்பு ஏப்.23 வாக்குப்பதிவு நாளிலும் தொடர வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பூத் முகவர்களுக்கு அவர் குறிப்பிட்ட வழிமுறைகள்: வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்; தேர்தல் அதிகாரி ஆரம்பத்தில் வழங்கும் படிவம் 17C-ல் உடனடியாக கையொப்பமிடக் கூடாது; வாக்குப்பதிவு முடிந்த பின் எண்ணிக்கைகளை சரிபார்த்து உறுதிப்படுத்திய பிறகே கையொப்பமிட்டு நகல் பெற வேண்டும். மேலும், நேரம் முடிவடையும் போது வரிசையில் நிற்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படுவதை உறுதி செய்து, பின்னர் CU பட்டனில் “Close” அழுத்தப்படுவதை கவனிக்க வேண்டும்; படிவம் 17C உள்ளிட்ட படிவங்களில் தேர்தல் அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பமிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
2026 சட்டசபைத் தேர்தல் தமிழக வளர்ச்சி தொடரவும், மாநில உரிமைகள் காக்கவும் முக்கியமான களம் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், ஒன்றாக விழிப்புடன் பணியாற்றினால் வெற்றி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே எனத் தெரிவித்தார்.





