சென்னை: பாஸ்போர்ட் சேவை மையங்களைப் போல, தனியார் சேவை மையங்கள் வழியாக பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் வழிமுறைகளை தமிழக பதிவுத் துறை உருவாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் தற்போது 589 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அங்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கிடைப்பதைப் பொறுத்தே பல பணிகள் நடைபெறும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. இதை மாற்றும் நோக்கில் துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ‘ஸ்டார் 3.0’ என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால், பொதுமக்கள் எங்கிருந்தும் இணையதளம் மூலம் பத்திரப்பதிவை மேற்கொள்ள வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் மஹாராஷ்டிராவில் பத்திரப்பதிவு பணிகளுக்காக தனியார் மையங்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஜூலை மாதம் முதல் 60 தனியார் மையங்கள் செயல்பட உள்ளதாகவும், அங்கு பதிவுத் துறை சார்பில் ஒரு சார்-பதிவாளர் மற்றும் ஒரு எழுத்தர் மட்டுமே இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பிற பணிகளை தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள்வதுடன், இதற்காக குறிப்பிட்ட சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பதிவுத் துறை அதிகாரி ஒருவர், மாநிலத்திலும் இதேபோன்ற திட்டம் உருவாகி வருவதாகவும், இதற்கான வழிமுறைகள் தயாராகி வருவதாகவும் கூறினார். தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின் நடவடிக்கைகள் வேகமடையும் என்றும், திட்டம் அமலுக்கு வந்தால் பொதுமக்களுக்கு சேவை மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.