தமிழகத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இதுவரை ரூ.1,262 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதில் ரொக்கப் பணம் மட்டும் ரூ.543 கோடி என அவர் கூறினார்.

ஏப்.23 நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பணிக்காக 83 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த தேர்தலில் 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவரை 4.18 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் அவர் கூறினார். சி-விஜில் செயலி மூலம் தற்போது வரை 5,634 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை; வெளியில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பாதுகாப்பு பணியில் 85,875 போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.