சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை புதன்கிழமை தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தேர்தல் நிலவரம் குறித்து பேசினார்.

வெள்ளைச் சட்டை, காக்கி பேன்ட் அணிந்து வந்தது ஏன் என்ற கேள்விக்கு, அது திட்டமிட்ட தேர்வு என்றும், நடிகர் விஜயும் இதேபோல் உடை அணிவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகமெங்கும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும், மதிய வெயில் இருந்தாலும் குடையுடன் வந்து மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மாநிலத்தில் 5.60 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், 29 வயதுக்கு கீழ் 1.30 கோடி வாக்காளர்கள் மற்றும் 17 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தேர்தல் பொதுவாக அமைதியாக நடைபெறும் என்றும், செய்தித்தாள்களில் வந்த தகவலின்படி 84 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், கோவையில் பணம் வழங்கல் மற்றும் கரூரில் தங்கம், வெள்ளி வழங்கல் போன்ற சம்பவங்கள் தேர்தல் பணிகளை பாதித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், சென்னை முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து வசதிகள் குறைவாக இருந்ததாக கூறி, தேர்தல் ஆணையம் போக்குவரத்துத் துறையுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கலாம் என்றார். எஸ்ஐஆர் பணிகளால் மொத்த வாக்குச்சதவீதம் 2 முதல் 2.5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், பணப் பகிர்வை கட்டுப்படுத்த முன்கூட்டியே கடுமையான கண்காணிப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.