தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் ‘அறப்போர் இயக்கம்’ தேர்தல் ஆணையத்திற்கு முறையீடு அனுப்பியுள்ளது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், பல இடங்களில் மிக அதிக அளவில் பண விநியோகம் நடந்ததாகவும், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறியதாகவும் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக ஆலங்குளம், மயிலாப்பூர், திருமங்கலம் ஆகிய மூன்று தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புகாருடன் தொடர்புடைய வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளும் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக இயக்கம் கூறியது.
இந்த சூழலில், அந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தலை முன்னெடுத்து நடத்துவது சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடைமுறை அல்ல என ‘அறப்போர்’ வலியுறுத்தியது. எனவே உடனடியாக தேர்தலை ரத்து செய்யவும், காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், தொடர்புடைய வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது விசாரணை நடத்தி தவறு நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை மற்றும் தகுதி நீக்கம் வழங்கவும் தேர்தல் ஆணையத்தை அது கேட்டுக்கொண்டது.




