தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை அதிகமானோர் வாக்களிக்க ஆர்வம் காட்டிய நிலையில், நேற்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பலர் பயணம் தொடங்கினர்.

ஆனால் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். அதிகாலை வரை காத்திருந்தும் பஸ் கிடைக்காததால் சில இடங்களில் சாலை மறியல் நடந்தது. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று ஏற்பாடாக பஸ்களை ஏற்பாடு செய்து வழங்கினர்.

இதற்கிடையில் பல மாவட்டங்களில் இருந்து பஸ்கள், கார்கள், தனியார் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பெருமளவு மக்கள் ஒரே நேரத்தில் பயணித்ததால் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையிலிருந்து வெளியேறவே பல மணி நேரம் எடுத்ததாகவும், வழியிலுள்ள முக்கிய நகரங்களிலும் இதே நிலை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் அதிகம் காணப்படவில்லை என்றும், பலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதால் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலில் சிக்கி மெதுவாக நகர்ந்தன.

நேற்று மாலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்ட சிலர், நெரிசல் காரணமாக இன்னும் சொந்த ஊர் சேர முடியாமல் இருப்பதாக கூறினர்; வாக்களிக்க முடியுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் சுமார் 70% வாக்குப்பதிவு நடந்தாலும், தென் மாவட்டங்களில் குறைவாக இருந்தது. பயணத் தாமதம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்தால் வாக்குச்சதவீதம் உயர வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது. வாக்களிக்க முடியாத நிலை குறித்து பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர்.