தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், சொந்த ஊர்களில் வாக்களிக்கச் செல்லும் மக்கள் காரணமாக சென்னையின் முக்கிய போக்குவரத்து மையங்களில் பண்டிகை காலத்தைப் போல கூட்டம் அதிகரித்தது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியதாக தெரிவிக்கப்பட்டது.

பயணிகள் தேவையை சமாளிக்க, ஏப். 21, 22, 23 தேதிகளில் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 5,574 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர். தேவைக்கேற்ப இன்று மதியம் வரை கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், ஏப். 21 மற்றும் 22 தேதிகளில் மட்டும் சென்னையிலிருந்து அரசு பேருந்துகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். ரயில்வே அதிகாரிகள் தகவலின்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் வழக்கமான விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் இரண்டு நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

மேலும், சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்ததாக கூறப்பட்டது. தேர்தல் முடிந்த பின் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பும் பயணிகளுக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.