தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதனால் கோவையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணம் அதிகரித்தது.
நேற்று மாலை முதலே ரயில்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், சொந்த வாகனங்கள் மூலம் பலர் புறப்பட்டதால் ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் கூட்டம் பெருகியது.
கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர் அதிகமாக திரண்டனர். நெரிசல் காரணமாக பஸ்களில் அவசரமாக முண்டியடித்து ஏறும் நிலையும் ஏற்பட்டது.
ஆனால் அரசு போக்குவரத்து கழகம் போதிய பஸ் வசதி செய்யவில்லை என பயணியர் குற்றம்சாட்டினர். இரவு 10 மணி வரை நூற்றுக்கணக்கானோர் காத்திருந்த நிலையில், அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் பல்வேறு டெப்போக்களில் இருந்து கூடுதல் பஸ்கள் வரவழைக்கப்பட்டு இயக்கப்பட்டன.





