பிரதமர் நரேந்திர மோடியை ‘பயங்கரவாதி’ என குறிப்பிட்டதாக கூறப்படும் கருத்து தொடர்பாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி, 24 மணி நேரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கார்கே பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் அந்த வகையில் விமர்சித்ததாக தகவல் வெளியாகி, இது பெரும் சர்ச்சையாக மாறியது. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து கார்கே விளக்கம் அளிக்கையில், பிரதமரை நேரடி பொருளில் ‘பயங்கரவாதி’ என கூறவில்லை என்றும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது, ஜனநாயக அமைப்புகளை அச்சுறுத்துவது போன்ற காரணங்களால் அந்த வகையில் கூறியதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பா.ஜ.க. நிர்வாகிகள் டில்லியில் தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர். தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்த பின், அந்த கருத்து திட்டமிட்டதாகவும், ஜனநாயக மரபுகளை அவமதிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் கிரண் ரிஜிஜு, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, கார்கேவிடம் 24 மணி நேரத்தில் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.