ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து, 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் பங்கேற்கும் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் லண்டனில் தொடங்கியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரானைச் சுற்றிய போர் சூழல் காரணமாக, இந்த முக்கிய கடல்வழியில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் இந்த ஜலசந்தியில் பாதுகாப்பான பயணத்தை மீட்டெடுக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்து புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கூட்டணி நாடுகளின் உதவி தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்த போதிலும், ஐரோப்பா, ஆசியா மற்றும் மேற்காசியாவைச் சேர்ந்த சுமார் 50 நாடுகள் பிரிட்டன் முன்னெடுக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனைகள் நடந்த நிலையில், தற்போது நேரடி கூட்டம் நடைபெறுகிறது.

வணிகக் கப்பல்கள் அச்சமின்றி பயணிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டுப் படைகள் நிறுத்தப்பட்டால் அவற்றின் கட்டுப்பாட்டு அமைப்பு எப்படி இருக்கும், நாடுகளுக்கு இடையேயான ராணுவத் திறன் பகிர்வு மற்றும் ஒருங்கிணைப்பு எப்படி அமைய வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

நிலையான போர் நிறுத்தம் ஏற்பட்டதும் தாமதமின்றி இந்தப் பாதையை பாதுகாப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான திட்டம், இந்த கூட்டத்தின் மூலம் இறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.