மும்பையில் ஆளும் பா.ஜ.க நடத்திய போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அந்த நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் மாநில அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா தோல்வியடைந்ததை கண்டித்து பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வொர்லி உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரம் வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது.

பள்ளியில் இருந்து குழந்தையை அழைத்து வரச் சென்ற பெண் ஒருவர் இந்த நெரிசலில் சிக்கியதால் ஆத்திரமடைந்து வாகனத்திலிருந்து இறங்கி போராட்ட இடத்துக்குள் சென்றார். அங்கு இருந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜனிடம், அருகில் காலி மைதானம் இருக்கும்போது ஏன் சாலையை மறித்து போராட்டம் நடத்துகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

அதே இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த மும்பை போலீசாரிடமும் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த வாக்குவாதத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து அமைச்சர் கிரிஷ் மஹாஜன் கூறுகையில், சாலையில் போராட்டம் நடத்தக்கூடாது என பெண் ஒருவர் குறுக்கிட்டதாகவும், விளக்க முயன்றபோதும் அவர் கேட்கும் மனநிலையில் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர் தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தியதாக கூறிய அமைச்சர், போராட்டத்தால் ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டார்.