சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் சில பள்ளிகள், மாணவர்களை விலை உயர்ந்த தனியார் பதிப்பக பாடப்புத்தகங்களை வாங்க கட்டாயப்படுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்.எச்.ஆர்.சி.) மத்திய கல்வி அமைச்சகம், சி.பி.எஸ்.இ. மற்றும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடப்பு விதிமுறைகளின்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்கள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) தயாரித்து வெளியிடும், மலிவு விலையில் கிடைக்க வேண்டிய பாடப்புத்தகங்களையே பயன்படுத்த வேண்டும்.
ஆனால் பல தனியார் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களுக்கு பதிலாக தனியார் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்குமாறு பரிந்துரைப்பதோடு, சில இடங்களில் கட்டாயப்படுத்துவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அனைவருக்கும் சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ன் நோக்கங்களுக்கு இந்த போக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை என்.எச்.ஆர்.சி. உறுப்பினர் பிரியங்க் கனுாங்கோ தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, மத்திய கல்வித்துறை செயலர் மற்றும் மாநில தலைமைச் செயலர்கள் விளக்கம் அளிக்கவும், புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.





