ஒவ்வொரு தேர்தலிலும் ‘நூறு சதவீத வாக்குப்பதிவு’ என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. ஆனால் நடைமுறையில் 70 சதவீதத்தைக் கூட கடப்பது பல நேரங்களில் பெரிய சவாலாகவே இருந்து வந்தது. இம்முறை வாக்குப்பதிவு உயரும் என்ற அதீத நம்பிக்கையுடன் ஆணையம் காத்திருக்கிறது.
இந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணமாக ‘எஸ்.ஐ.ஆர்.’ (SIR) பணியை குறிப்பிடுகின்றனர். இரட்டைப் பதிவு, இறந்தவர்களின் பெயர்கள், முகவரி மாறியவர்களின் பதிவுகள் போன்றவை பெருமளவில் நீக்கப்பட்டதால் வாக்காளர் பட்டியல் தெளிவடைந்துள்ளது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் இயல்பாகவே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நிலையை பதிவு செய்ய 2014 லோக்சபா தேர்தலில் ‘நோட்டா’ அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக ஆண்டில் நாடு முழுவதும் 59.97 லட்சம் வாக்குகள் (1.1%) நோட்டாவுக்கு பதிவானது; தமிழகத்தில் 39 தொகுதிகளில் 5.82 லட்சம் வாக்குகள் (1.4%) பதிவானதாக கூறப்படுகிறது. 2014-ல் நீலகிரி தொகுதியில் மட்டும் 46,559 நோட்டா வாக்குகள் பதிவாகி குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
மேலும் 2018 முதல் 2022 வரை பல்வேறு தேர்தல்களை சேர்த்து மொத்தம் 1.29 கோடி வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது, நோட்டா அறிமுகமானபோது இருந்த விழிப்புணர்வு இப்போது சற்று மங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., த.வெ.க. என நான்குமுனைப் போட்டி நிலவுவது வாக்காளர்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்குகிறது.
இதனால் இதுவரை நோட்டாவுக்கு வாக்களித்த சிலர், இம்முறை தங்களுக்கு பிடித்த கட்சியைத் தேர்ந்தெடுத்து நோட்டாவைத் தவிர்க்கும் சூழல் உருவாகலாம். இந்தத் தேர்தல் அதிக வாக்குப்பதிவை நோக்கிய பயணமா அல்லது நோட்டாவைத் தாண்டிய மாற்றமா என்பது இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கைகளில் தெரிய வரும்.




