ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறை விதிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவ்விதிகள் மே 1 முதல் அமலுக்கு வரும்.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ். கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்த தனிப்பட்ட “ஆன்லைன் விளையாட்டு ஆணையம்” உருவாக்கும் ஏற்பாடு இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ஒழுங்குமுறைகள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, பணம் தொடர்பில்லாத ஆன்லைன் சமூக விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு ஆணையத்தில் பதிவு கட்டாயமில்லை.
ஆனால் “இ-ஸ்போர்ட்ஸ்” எனப்படும் மின்னணு கருவிகளை பயன்படுத்தி போட்டி விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்கனவே சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக விளையாட்டுகள் மற்றும் இ-ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





