புதுடில்லி: ‘டிஜிட்டல் கைது’ மோசடியில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் போலி கணக்குகளை கண்காணிப்பதில் குறைபாடுகள் இருந்ததாகக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, ஐந்து தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (RBI) அபராதம் விதித்து இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் நரேஷ் மல்ஹோத்ரா (78) கடந்த ஆண்டு ஆகஸ்டில் மோசடிக்குள்ளானார். சி.பி.ஐ., அமலாக்கத் துறை உயரதிகாரிகள் போல தொலைபேசியில் பேசிய மர்ம நபர்கள், அவரை ‘டிஜிட்டல் கைது’ செய்ததாக கூறி சுமார் ஒரு மாதம் மனஅழுத்தத்தில் வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் அறிவுறுத்தலின்படி, மல்ஹோத்ரா ரூ.22.9 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளார். பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்ததுடன், RBI குறைதீர்ப்பாளரிடமும் முறையிட்டார்.
RBI விசாரணையில் ஆக்சிஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, யெஸ் வங்கி ஆகியவை போலி/சந்தேகக் கணக்குகளை முறையாக கண்காணிக்க தவறியதாகவும், கணக்கு தொடக்கம் மற்றும் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர் விவரச் சரிபார்ப்பு மற்றும் மோசடி தடுப்பு விதிமுறைகளில் மெத்தனம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு வங்கிகள் பரிமாற்றத் தொகையின் 5% இழப்பீடாக வழங்கவும், கூடுதல் குறைபாடுகள் காரணமாக யெஸ் வங்கி 7.5% வழங்கவும் குறைதீர்ப்பு அமைப்பு உத்தரவிட்டது.
இதன் மூலம் மல்ஹோத்ராவுக்கு ஐந்து வங்கிகளிடமிருந்து ரூ.1.31 கோடி இழப்பீடு கிடைத்துள்ளது. மேலும் முடக்கப்பட்ட கணக்குகளிலிருந்து ரூ.60 லட்சம் கூடுதல் தொகை அவரது கணக்கில் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இழந்த ரூ.22.9 கோடியை வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என RBI-யிடம் அவர் மேல்முறையீடு செய்துள்ளதுடன், உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.





