தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜ் தொடர்புடைய வீட்டில் திடீர் சோதனை நடத்திய பறக்கும் படையினர், பெருந்தொகை பணத்தை பறிமுதல் செய்தனர்.
வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் பணம் வழங்குவதற்காக வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பறக்கும் படை அலுவலர் பொன்மாரி தலைமையிலான குழு புதன்கிழமை மாலை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை நேரத்தில் அமிர்தராஜ் வீட்டில் இல்லை; கச்சனாவிளையை சேர்ந்த சுரேஷ் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
வீடு முழுவதும் நடந்த சோதனையில் ரூ.500 நோட்டுகளாக கட்டுகளாக வைத்திருந்த ரூ.62,49,000 கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரிகளும் அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும், வேட்பாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் குழு கலெக்டரிடம் மனு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர், டூ-வீலரில் வந்த இருவரிடமிருந்து ரூ.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பட்டர்புரம் முத்துகிருஷ்ணன் மற்றும் மறுகால்குறிச்சி பரமசிவன் என அடையாளம் காணப்பட்ட அவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்றும், வாக்காளர்களுக்கு வழங்க பணம் எடுத்துச் சென்றதாகவும் போலீசார் கூறி வழக்குப்பதிவு செய்தனர்.





