காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் நில விவகாரத்தில், அங்குள்ள மக்களின் நில உரிமையை தமிழக அரசு தன்னிச்சையாக பறிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், 2019 முதல் அமலில் இருந்த ‘ஸ்டேட்டஸ் கோ’ உத்தரவை ரத்து செய்து, ஆறு ஆண்டு காலமாக நீடித்த தடையை நீக்கியுள்ளது.
இந்த விவகாரம் 2018ல் எழுந்த குற்றச்சாட்டுகளிலிருந்து தொடங்கியது. தாழம்பூர் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் தனிநபர்களுக்கும் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இதையடுத்து 2019ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி, தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற ‘ஸ்டேட்டஸ் கோ’ உத்தரவை பெற்றது.
அதன் விளைவாக, ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக கட்டப்பட்ட 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் பதிவுகள் தடுக்கப்பட்டன. வீடுகளை வாங்கியவர்கள் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
2018ல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பின்னர் தமிழக அரசின் ‘ஸ்டேட்டஸ் கோ’ உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், 2019ல் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 30–40 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு திடீரென நில உரிமை கோர முடியாது என்றும், காலச்சக்கரத்தை பின்னோக்கி சுற்றி அப்பாவி குடிமக்களின் உரிமைகளை பறிக்க முடியாது என்றும் கூறியது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நான்கு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களில் மாநில அரசு இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.





