தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று 234 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு சிறந்த மற்றும் சீரான அனுபவம் கிடைக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மாநிலத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள். இதில் 2.80 கோடி ஆண்கள், 2.93 கோடி பெண்கள் மற்றும் 7,728 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குகின்றனர். மேலும், 14.5 லட்சம் முதல் முறை வாக்காளர்களும் இந்த தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.
மாநிலம் முழுவதும் 33,133 இடங்களில் 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1.06 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், அதே எண்ணிக்கையில் கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபாட் சாதனங்களும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் 3.60 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர்; இதில் 83,875 போலீசார் உள்ளனர். பறக்கும் படை சோதனைகளில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ரொக்கம் மட்டும் ரூ.543 கோடி எனவும் கூறப்பட்டது.
சமூக வலைதள விதிமீறல்கள் தொடர்பாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,180 சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. 249 மாதிரி ஓட்டுச்சாவடிகள், 325 பெண்கள் ஓட்டுச்சாவடிகள், 71 மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டுச்சாவடிகள், 79 இளைஞர்கள் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; பல இடங்களில் பசுமை ஓட்டுச்சாவடிகளும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 3,025 இடங்களில் உள்ள 5,949 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை; வெளியே பாதுகாப்பாக வைக்க தனி வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.





