சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் சில்லரை மதுக்கடைகள் மூன்று நாட்கள் விடுமுறையில் மூடப்பட்டுள்ளன. ஏப்.21 முதல் இன்று வரை கடைகள் செயல்படாது; கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களையும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. புறநகர் ரயில் நிலையங்களின் பின்புறம் போன்ற வெளிச்சம் குறைவான இடங்கள், கடற்கரையை ஒட்டிய பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சிலர் மது பாட்டில்களை முறைகேடாக விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவார்ட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச சில்லரை விலை (எம்.ஆர்.பி.) மீது ரூ.100 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏப்.20 அன்று வழக்கத்தை விட அதிகமாக மது வாங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சட்டவிரோத விற்பனை குறித்து போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல். மேலும், சிலர் தினமும் குறைந்த அளவில் வாங்கி சேர்த்து வைத்த மது பாட்டில்களை, கடைகள் மூடியதும் அதிக விலைக்கு விற்பதாக மதுக்கடை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து பறக்கும் படையினர் சோதனைகள் அதிகரித்ததால், ஒரே நபருக்கு அதிக அளவில் விற்பனை செய்யாமல் கடைகள் கட்டுப்பாடு கடைப்பிடித்ததாகவும் அவர்கள் கூறினர். கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.