திருப்பூர்: ஓட்டுக்கு பணம் வழங்குவதாக கூறி டோக்கன் கொடுத்தும் பணம் தரப்படவில்லை எனக் கூறி திருப்பூரில் சில பகுதிகளில் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட செல்லம் நகர், சிவசக்தி நகர் 2-வது வீதியில் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கூடினர். அங்கு இருந்த சில கட்சியினரை முற்றுகையிட்டு, டோக்கன் மட்டும் கொடுத்து இன்னும் பணம் வழங்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கூட்டம் அதிகரித்ததால் கட்சியினர் அங்கிருந்து விலகினர். இதையடுத்து பொதுமக்கள் கே.டி.சி. சாலையில் சில நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து மறியல் குறித்து விசாரித்து கூட்டத்தை கலைத்தனர்.
இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் நேற்று இரவு தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. ஏழாவது வார்டில் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை என அதிருப்தியடைந்தவர்கள், தி.மு.க. வேட்பாளர் அப்துல் வஹாப் வீட்டை நோக்கி சென்றதாக தகவல் தெரிவிக்கிறது.
திண்டுக்கல்லில் 17-வது வார்டில் ‘கணக்கு முடிந்துவிட்டது; இனி பட்டுவாடா இல்லை’ என கூறப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜி.டி.என். சாலையில் உள்ள தி.மு.க. கவுன்சிலர் அலுவலகத்தை முற்றுகையிட்டதாகவும் கூறப்படுகிறது.





