அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் மீடியா அண்டு டெக்னாலஜி குழுமத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்கு மதிப்பு கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி டெவின் நுன்ஸ் மாற்றப்பட்டுள்ளார்.
அறிக்கையின் படி, நவம்பர் 2024 முதல் தற்போது வரை நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.55,000 கோடிக்கு மேல் குறைந்துள்ளது. இது சுமார் 67% சரிவாகக் கணிக்கப்படுகிறது. இதனால் பல முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர்.
டிரம்ப் மீடியா நிறுவனத்தின் கீழ் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளம் இயங்கி வருகிறது. 2021 அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்விக்குப் பிறகு ‘கேபிடோல்’ சம்பவத்தைத் தொடர்ந்து பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் அவரது கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், மாற்றாக இந்த தளம் தொடங்கப்பட்டது.
இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட போது பங்கு விலை உயர்வு கண்டதாக கூறப்படுகிறது. ஆனால் டிரம்பின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் எம்.பி.யுமான நுன்ஸ் தலைமையில், நிறுவனம் லாபம் ஈட்டாமல் சுமார் ரூ.9,000 கோடி நஷ்டத்தை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுன்ஸை நீக்கியதற்கான காரணத்தை நிறுவனம் வெளியிடவில்லை. புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக கெவின் மெக்கர்ன் நியமிக்கப்பட்டுள்ளார்; இவர் முன்பு டிரம்ப் மீடியாவின் ஆலோசகராக இருந்ததுடன், தொழில்நுட்பத் துறையில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் என கூறப்படுகிறது.





