புகைப்பிடிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், 2009 ஜனவரி 1க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் மசோதாவை பிரிட்டன் பார்லிமென்ட் நிறைவேற்றியுள்ளது. இது ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் முயற்சியாக அரசு தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் புகைப்பிடிப்பால் ஏற்படும் நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 64,000 பேர் உயிரிழப்பதாகவும், புகைப்பிடிப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க மட்டும் அரசு ஆண்டுக்கு ரூ.30,000 கோடிக்கு மேல் செலவிடுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘புகையிலை மற்றும் இ-சிகரெட் தடுப்பு’ மசோதா பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்ட தேதிக்குப் பின் பிறந்தவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
அடுத்த வாரம் மன்னர் சார்லஸ் ஒப்புதல் அளித்தவுடன் இது அதிகாரப்பூர்வ சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 முதல் இந்த வயது வரம்பு கட்டுப்பாடுகள் முழுவீச்சில் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




