மத்திய அரசு அறிவித்துள்ள ‘நகர்ப்புற கட்டமைப்பு நிதி’ (சவால் நிதி) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகள் நிதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நகர்ப்புற அடிப்படை சேவைகளை உயர்த்த ‘அம்ரூத்’ திட்டமும், குறிப்பிட்ட நகரங்களில் மேம்பாட்டு பணிகளுக்காக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமும் முன்னதாக செயல்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் திட்டங்களை உருவாக்கி போட்டியிடும் வகையில் புதிய நிதி திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி, 2025 நிலவரப்படி 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களே தேர்வுக்கு தகுதி பெறும். நகர்ப்புற திட்டமிடல், வடிவமைப்பு, போக்குவரத்து வசதிகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி வழங்கப்படும்; ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் நகரத்தின் திட்ட மதிப்பில் 25% தொகையை மத்திய அரசு வழங்கும். 50% தொகையை அந்த உள்ளாட்சி அமைப்பு கடன் பத்திரங்கள் (பாண்டுகள்) விற்பனை மூலம் திரட்ட வேண்டும்; மீதமுள்ள 25% மாநில அரசு வழியாக பெறப்படும் என வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்த தேசிய மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைப்பதற்கான அறிவுறுத்தல்களும் இடம் பெற்றுள்ளன.

தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை தவிர கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும், கோவை மற்றும் மதுரைக்கு நிதி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்றும், தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.