சென்னை: தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தேர்தல் காலத்தில் பிரதான சாலைகள் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் போலீஸ் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பெண் வாக்காளர்களின் தேவைகளை கவனிக்க ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பெண் காவலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

பறக்கும் படை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி, சிசிடிவி, ட்ரோன் மற்றும் வீடியோ கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஓட்டுச்சாவடிகளில் மூத்த வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு போதுமான குடிநீர், இருக்கை, நிழல் வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.