புதுடில்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் என்ற சமூக ஊடக வதந்திகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மறுத்துள்ளது.

தேர்தல் செயல்முறை நிறைவடைந்த பின் எரிபொருள் விலை உயர்வு வரும் என இணையத்தில் தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. கேரளா, அசாம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதுடன், தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் தேர்தல் முடிந்துள்ளது; மேற்கு வங்கத்தில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு இன்னும் நடைபெற உள்ளது.

அறிக்கையில், எரிபொருள் விலை உயர்த்தும் எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்றும், மக்களிடையே அச்சம் மற்றும் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட தவறான தகவல்களே இவை என்றும் கூறப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வரும் சரிபார்க்கப்படாத தகவல்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியா எனவும், சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் கடும் உயர்விலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பணவீக்க அழுத்தங்களிலிருந்து நுகர்வோரை காக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களை உள்வாங்கி எண்ணெய் நிறுவனங்கள் சில்லரை விற்பனை விலைகளை நிலையாக வைத்துள்ளதாக அமைச்சகம் கூறி, வதந்திகளின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.