சென்னையில் வாக்குப்பதிவுக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற மக்களுக்கு, பஸ் பற்றாக்குறை பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் அதிக அளவில் விடுப்பில் சென்றதால், அறிவிக்கப்பட்ட அளவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பஸ்களுடன், 5,574 சிறப்பு பஸ்கள் என ஏப். 21, 22, 23 தேதிகளில் மொத்தம் 10,663 பஸ்கள் இயக்கப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பயணிகள் வருகைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் போதவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று அதிகாலை 6 மணி வரை கிளாம்பாக்கம் முனையத்திற்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. குடும்பத்துடன் பலர் விடிய விடிய காத்திருந்ததால் முனையம் பரபரப்பாக இருந்தது. இருசக்கர வாகன நிறுத்துமிடம் நிரம்பி வழிந்ததால் பலருக்கு வாகனங்களை நிறுத்த இடமின்றி தவிப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்தும் பஸ் கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோர் வீடு திரும்பி, வாக்களிக்க முடியவில்லை என தெரிவித்தனர்.

பணியில் இருக்க வேண்டிய ஓட்டுனர்கள், நடத்துனர்களில் 30% முதல் 40% பேர் விடுப்பு எடுத்ததாக பணியாற்றிய ஊழியர்கள் கூறினர்; இதனால் அரசு பஸ்கள் முழு அளவில் ஓடவில்லை. மேலும், சென்னையில் காலை 10 மணிக்கு பின் மாநகர பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டதால், முனையங்களுக்கு செல்ல சிலர் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோ, கால்டாக்சி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல் கடலூர், விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களிலும் போதிய பஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.