சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான போலீசார், தபால் ஓட்டு கிடைக்காததால் ஓட்டுப்பதிவு செய்ய முடியாமல் தவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள் முறையாக செயல்படவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.

சென்னையில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 30,000 போலீசார் பணியாற்றுகின்றனர். கடந்த தேர்தலில் ஏற்பட்ட சிக்கல் இம்முறை வராது; காவல் துறையினர் அனைவரும் தபால் ஓட்டு போட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சில வாரங்களுக்கு முன் அப்போது கமிஷனராக இருந்த அருண் தெரிவித்திருந்தார்.

ஆனால் இம்முறையும் பலருக்கு தபால் ஓட்டு வரவில்லை என கூறப்படுகிறது. முன்கூட்டியே விண்ணப்பித்தும் ஓட்டு கிடைக்கவில்லை; விடுமுறையும் வழங்கப்படவில்லை என ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

இதனால் சொந்த ஊருக்கு சென்று ஓட்டு போட முடியாமல் தங்களுடன் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். பல மாவட்டங்களில் இருந்து சென்னை காவல் துறையில் பணியாற்றுவோருக்கு தபால் ஓட்டு கிடைக்க உறுதியான நடவடிக்கை தேவை என்றும், தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை அதிகப்படுத்தினால் 100–150 கி.மீ. தூரத்திற்குள் உள்ளவர்கள் சொந்த ஊருக்கு சென்று ஓட்டு போட முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.