புதுடில்லி: தமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டசபை தேர்தல்களில் பதிவான உயர்ந்த ஓட்டுப்பதிவு சதவீதத்தைப் பார்த்து இந்திய குடிமகனாக மகிழ்ச்சி அடைந்ததாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஏப்.24 அன்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்குவங்கத்தில் 152 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, தமிழகத்தில் 85.15% மற்றும் மேற்குவங்கத்தில் 92.72% ஓட்டுப்பதிவு பதிவானது.
எஸ்ஐஆர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்த கருத்தை அவர் தெரிவித்தார். மக்கள் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்தும் போது, அது ஜனநாயக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றார்.
மேலும், தேர்தல் கால வன்முறை சம்பவங்கள் நடந்த வரலாறு உள்ள மாநிலத்தில் அமைதியான தேர்தலை உறுதி செய்வதில் மத்திய பாதுகாப்புப் படைகளின் பங்களிப்பையும் உச்சநீதிமன்றம் பாராட்டியது.
எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, மனுதாரர்கள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை அணுக வேண்டும் என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.





