கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வினர் வீடு வீடாக க்யூஆர் கோடு அட்டைகளை வழங்கி, அவை தங்கக் காசு பெறும் டோக்கன் என கூறியதாக சில பகுதிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வேலாண்டிபாளையம், கோவில்மேடு, சாய்பாபா காலனி, கே.கே.புதூர், சங்கனூர், கண்ணப்பன் நகர், ரத்தினபுரி, நல்லாம்பாளையம், கணபதி, கணபதி மாநகர், காந்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் காலை வரை இந்த அட்டைகள் வழங்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். வீடுகளுக்கு வந்தவர்கள் வாக்காளர் பட்டியலை கையில் வைத்திருந்ததாகவும் கூறினர்.
க்யூஆர் அட்டையை பெற்றுக்கொண்டு தி.மு.க.வுக்கு வாக்களித்து, பின்னர் அட்டையை மீண்டும் அவர்களிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என கூறியதாகவும், அதற்குப் பதிலாக 2 கிராம் தங்கநாணயம் வழங்கப்படும் என தெரிவித்ததாகவும் சிலர் கூறினர்.
அட்டையின் மறுபுறத்தில் உதயசூரியன் சின்னம் அச்சிடப்பட்டிருந்ததாகவும், க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தபோது வரிசை எண்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அந்த எண் அடிப்படையில் பரிசுத்தொகை வழங்க திட்டமிட்டிருப்பதாக அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
இதுகுறித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், தொகுதியின் பல பகுதிகளில் வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு விநியோகம் நடந்ததாக குற்றம்சாட்டினார். பறக்கும் படை, போலீசார் மற்றும் மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளதாக கூறிய அவர், தேர்தல் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.





