புதுடில்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டவிரோத நிலக்கரி வர்த்தக முறைகேட்டுடன் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயன்றதாகக் கூறி, அந்த நடவடிக்கை “வெட்கக்கேடானது” என அமலாக்கத் துறை (ஈ.டி.) உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியது.

நிலக்கரி ஊழல் தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரியில் கொல்கட்டாவில் உள்ள தேர்தல் வியூக நிறுவனம் ஐ-பேக் தொடர்புடைய இடங்களில் ஈ.டி. சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அச்சோதனையின் போது, போலீசார் புடைசூழ ஐ-பேக் இயக்குநர் பிரதிக் ஜெயின் வீட்டிற்கு முதல்வர் வந்ததாகவும், அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் ஈ.டி. கூறியது; இதனால் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தலையீடு செய்ததாகக் கூறி சி.பி.ஐ. விசாரணை கோரி ஈ.டி. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்த நிலையில், முன்தினம் அரசியல் தலையீடு ஜனநாயகத்திற்கு ஆபத்தாக அமையலாம் என அதிருப்தி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

இரண்டாவது நாளான நேற்றைய விசாரணையில், மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருசுவாமி, ஈ.டி. மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும், அரசியல் ஆதாயத்திற்காக உச்ச நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்த முயல்கிறார்கள் என்றும் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சோதனையை மாநில அரசு தடுக்க முயன்றதாகவும், சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஈ.டி. அதிகாரிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும், விசாரணை அமைப்பை கடமை செய்ய விடாமல் தடுப்பது சட்டவிரோதம் என்றும் வாதிட்டார். மேலும், பல புகார்கள் பதிவு செய்யப்பட்டதில் இரண்டை முதல்வரே அளித்ததாகவும், சட்டப்படி செயல்பட்ட ஈ.டி. அதிகாரிகள் மீதே வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி, இச்சூழலில் சி.பி.ஐ. விசாரணை அவசியம் என வலியுறுத்தினார்.