தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடியில் நேற்று வாக்களித்தார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான அவர், சமீபத்தில் தனது 99வது பிறந்த நாளை கொண்டாடினார். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தார்; தற்போது பா.ஜ.க.வில் உள்ளார்.

அவரது அரசியல் பயணத்தில், 1967 மற்றும் 1971 சட்டசபைத் தேர்தல்களில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1980ல் அண்ணா நகர் தொகுதியில் கருணாநிதியிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

வாக்களித்த பின் வெளியிட்ட பதிவில், 99 வயதில் வாக்களித்தது பெருமையாக இருப்பதாக ஹண்டே கூறினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1946ல் நடந்த சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் தான் முதன்முறையாக வாக்களித்ததாகவும், அப்போது மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்ததாகவும் நினைவுகூரினார்.

அன்றிலிருந்து அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வருவதாக கூறிய அவர், வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல; எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பும் என்றும், ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.