கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைந்தால், மாநிலத்தில் நடந்ததாக கூறப்படும் அநீதி மற்றும் அராஜகங்கள் தொடர்பான வழக்குகள் மீண்டும் திறக்கப்பட்டு மறுவிசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டம்டம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலில் 92% வாக்குகள் பதிவானதாக குறிப்பிட்டார். இது மாநில தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்குப்பதிவு என்றும், தேர்தல் செயல்முறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது என்றும் கூறினார்.
திரிணமுல் காங்கிரஸ் “ஜனநாயகக் கோயிலைச் சிதைத்தது” என குற்றம்சாட்டிய மோடி, அதிக வாக்குப்பதிவு மூலம் மக்கள் அதை மீண்டும் கட்டியெழுப்பியதாக கூறினார். மக்கள் ஆர்வமாக தேர்தலில் பங்கேற்பது மாற்றத்திற்கான அறிகுறி என்றும், இதனால் திரிணமுல் கவலை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 29-ம் தேதி இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மே 4-ம் தேதி முடிவுகள் வெளியான பிறகு திரிணமுல் “குண்டர்கள்” ஒளிந்து கொள்ள இடமிருக்காது என்றும் அவர் கூறினார். பாஜ ஆட்சி வந்தால் ஊழல், அராஜகம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்; மாநிலத்தின் இழந்த பெருமை மீட்கப்படும்; பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மே 4-ம் தேதி முடிவுகள் வெளியாகி பாஜ ஆட்சி அமைந்தவுடன், மேற்கு வங்கத்தில் நடந்ததாக கூறப்படும் ஒவ்வொரு அநீதி மற்றும் அட்டூழியம் தொடர்பான கோப்புகளும் மீண்டும் திறக்கப்பட்டு, அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்படும்; இது தன் உத்தரவாதம் என மோடி மீண்டும் வலியுறுத்தினார்.





