கொல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது சாலையோர கடையில் சாப்பிட்ட ‘மசாலா பொரி’ விவகாரத்தை முன்வைத்து, திரிணமுல் காங்கிரசை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கடுமையாக விமர்சித்தார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு ஏப்.29-ல் நடைபெற உள்ளது.

சமீபத்தில் ஜார்கிராமில் நடந்த பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி சாலையோர கடையில் மசாலா பொரி வாங்கி சாப்பிட்டார். இது மாநிலத்தில் பிரபலமான சிற்றுண்டி வகை எனக் கூறப்படும் நிலையில், இதைத் தொடர்ந்து முதல்வர் மம்தாவும் திரிணமுல் தலைவர்களும் மோடியை விமர்சித்தனர்.

இரண்டாம் கட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணா நகரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “நான் மசாலா பொரி சாப்பிட்டேன்; அதன் காரம் திரிணமுலுக்கு உறைத்துள்ளது” என கூறினார். மேலும் மே 4-ம் தேதி மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி கொண்டாட்டம் நடைபெறும்; அப்போது இனிப்புடன் மசாலா பொரியும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், கடந்த 50 ஆண்டுகளான தனது அரசியல் பயணத்தில் இந்தத் தேர்தலில் வன்முறை சம்பவங்கள் மிகக் குறைவாகவே நடந்துள்ளதாகவும், தேர்தல் கமிஷனை பாராட்டுவதாகவும் மோடி கூறினார். இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.