சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி கோரும் மனுக்களால் எழுந்த மத உரிமைகள், சுதந்திரங்கள் தொடர்பான முக்கிய சட்டக் கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று எட்டாவது நாளாக நடந்த விசாரணையில், பந்தளம் அரச குடும்பம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தின் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றாலும், மதச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களில் தலையிடும் போது நீதிமன்றங்கள் நிதானமாக செயல்பட வேண்டும் என்று வாதிட்டார்.

மேலும், மனுதாரர்கள் உண்மையான பக்தர்களும் மத நம்பிக்கை கொண்டவர்களும் அல்ல என்றும், அய்யப்பனைப் பற்றி அவதூறான கருத்துகளை பரப்பியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில் நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ஒரு நடைமுறை உண்மையில் மதரீதியானதா என்பதை எப்படி உறுதி செய்வது என்றும், ஹிந்து மதத்தில் உள்ள பல்வேறு நடைமுறைகளை எந்த அளவுகோலால் சோதிப்பது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஜெய்ந்த முத்துராஜ், சைவ சமயத்தில் பக்தி பொதுவான சடங்குகளுக்கு அப்பாற்பட்ட வடிவங்களிலும் வெளிப்படலாம் என்ற உதாரணத்தை முன்வைத்து, ஒரு சடங்கு மதத்தின் இன்றியமையாத பகுதியா என்பதை நீதிமன்றம் ஆராய வேண்டிய அவசியம் இல்லை என வாதிட்டார். வழக்கு விசாரணை ஏப்.28க்கு ஒத்திவைக்கப்பட்டது.