சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஏப்.24 அன்று புட்டபர்த்தியில் ‘ஸ்ரீ சத்ய சாய் ஆராதனா மஹோத்ஸவம்’ சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

சத்ய சாய் பாபா தன் பௌதிக உடலை விட்டு ‘ஜோதி ரூபமாக’ மாறிய தினத்தை நினைவு கூறும் புனித நிகழ்வாக இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. உண்மை, அமைதி, அன்பு, அகிம்சை போன்ற மனித விழுமியங்களை வலியுறுத்தும் நாளாகவும் ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பு இதை கொண்டாடுகிறது.

விழாவையொட்டி பகவானின் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து பக்திப் பாடல்கள் மூலம் நன்றியுணர்வை வெளிப்படுத்தினர். கருவறை மண்டபமும் ‘சாய் குல்வந்த் மண்டபம்’ முழுவதும் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டு பக்தி சூழல் உருவாக்கப்பட்டது.

காலை 8.00 மணிக்கு வேத பாராயணத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து 8.10 மணிக்கு ‘சாய் பஞ்சரத்ன’ கீர்த்தனைகள் பாடப்பட்டன; இது ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் மரபாகும். காலை 9.00 மணிக்கு அறிமுக உரை, பின்னர் உரைகள், தெய்வீக சொற்பொழிவு, பஜனைகள் மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற்றன.

மாலை நிகழ்ச்சியாக 5.00 மணிக்கு வேத பாராயணம், 5.45 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதே நாளில் உலகம் முழுவதும் உள்ள சாய்பாபா மையங்களில் சிறப்பு பஜனைகள் மற்றும் ஏழை எளியோருக்கு உணவளித்தல் போன்ற சேவைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.