காரைக்குடி தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட கட்சிகள் தமிழகத்தை “நாசமாக்கி விட்டன” என்றும், தேர்தல் ஜனநாயகம் என்ற பெயரில் மட்டுமே நடக்கிறது என்றும் விமர்சித்தார்.

இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வந்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய சீமான், த.வெ.க. தலைவர் விஜய் கேட்டது போல ஓட்டுப்பதிவுக்கு மேலும் இரண்டு மணி நேர அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்றார். தீபாவளி, பொங்கல் போல தேர்தலும் “ஜனநாயகப் பண்டிகை” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், “இலவசம் என்பது வளர்ச்சி அல்ல” என்று கூறிய அவர், இலவசங்களை எங்கிருந்து எடுத்து எப்படிக் கொடுப்பது என கேள்வி எழுப்பினார். பிற நாடுகள் கடன் வாங்கினாலும், கடனை வாங்கி இலவசம் வழங்காமல் கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை சேவைகளை தரமாக வழங்குகின்றன என்று அவர் ஒப்பிட்டார்.

காங்கிரஸ் சேர்ந்த சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது பல வங்கிகளைத் திறந்ததாக கூறியதை சுட்டிக்காட்டிய சீமான், அப்படி என்றால் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றார். நாட்டை நேசிக்கும் கூட்டமும் நடிகரை நேசிக்கும் கூட்டமும் எங்கு நிற்கும் என்பது விரைவில் தெரியும் என்றும், அஜித் அல்லது சிவகார்த்திகேயன் வந்திருந்தால் இதைவிட கூட்டம் அதிகம் வந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.