சென்னை: வருமான வரி சோதனை விவகாரம் தொடர்பான ஆதாரங்களை இன்று காலை வெளியிட உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தபோது, தன்னை அரசியல் ரீதியாக முடக்குவதற்காக தனது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக அவர் முன்பு குற்றம்சாட்டியிருந்தார். இதை வருமான வரித்துறை மறுத்ததுடன், காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரசாரம் செய்த நேரத்தில், திடீர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், “சோதனை” என்ற பெயரில் தங்கியிருந்த இடங்கள், அலுவலகம் மற்றும் கூட்டணி கட்சியினரின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படையாக கூறியபோதும், வருமான வரித்துறை அதிகாரிகள் முழுமையாக மறுத்து வருவதாகவும், உண்மையில் நடந்ததை மக்களுக்கு தெளிவுபடுத்த முழு ஆதாரங்களையும் வெளியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட மணிமங்கலத்தில் நேற்று வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்மையைச் சொல்ல எந்தத் தடையும் இல்லை என்றும், சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் யார் என்பதை இன்று காலை 11.00 மணிக்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிடுவேன் எனவும் கூறினார்.





