சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி ஓட்டளிக்கவில்லை என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுவரை கரூரில் போட்டியிட்டு வந்த அவர், கோவையில் தி.மு.க. வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் கோவை தெற்கு தொகுதியில் களமிறக்கப்பட்டார். பிரசார காலத்தில் கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் மாறிமாறி அவர் பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டாலும், அவரது வாக்குரிமை கரூரில் தான் உள்ளது. தேர்தல் நாளில் காலை கரூருக்கு சென்று ஓட்டு போட்டுவிட்டு கோவைக்கு திரும்புவார் என முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவர் கரூருக்கு செல்லாமல் கோவையிலேயே தங்கி இருந்ததாக கட்சி தரப்பு கூறியது. ஓட்டுப்பதிவின்போது தொகுதியில் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டால் அதை முன்னின்று சமாளிக்க வேண்டும் என்பதற்காக அவர் கோவையிலேயே இருந்திருக்கலாம் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், தேர்தலுக்கு முன்பே அவர் கோவை தெற்கு தொகுதியில் குடியேறியிருந்ததாகவும், தேர்தல் நாளிலும் அங்கேயே இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.