பெரம்பலூர்: விசிக தலைவர் தொல். திருமாவளவன், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தங்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூர் ஓட்டுச்சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். இது இரண்டு கட்சிகள் அல்லது இரண்டு அணிகளுக்கிடையேயான போட்டி அல்ல; இரண்டு கருத்தியல்களுக்கிடையேயான மோதல் என்றும், மதவாத வெறுப்பு அரசியலுக்கு தமிழ்மண்ணில் இடமில்லை என்பதை மக்கள் தீர்ப்பாக எழுதுவார்கள் என்றும் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அவர் குறிப்பிட்டார். புதுமைப் பெண், உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட முயற்சிகள் பெண்களை வலிமைப்படுத்தியதாகவும், மீண்டும் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி மேலும் தலைத்தோங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜயை விமர்சித்த திருமாவளவன், திமுக எதிர்ப்பை மட்டுமே முன்வைத்து பரப்புரை செய்ததாகவும், கொள்கை கோட்பாடுகள் அல்லது எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் பேசவில்லை என்றும் கூறினார். திமுக ஆட்சிக்காலத்தில் மாநிலம் பொருளாதார வளர்ச்சியுடன் முன்னேறியதாகவும், அந்த வளர்ச்சியை மேலும் உறுதிப்படுத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு தொலைநோக்கு பார்வை இருப்பதால் அடுத்த ஆட்சியில் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக கொண்டு செல்ல அவர் பாடுபடுவார் என்றும், அதற்கு விசிக முழு ஆதரவு அளிக்கும் என்றும் திருமாவளவன் கூறினார்.