வேட்பாளர் தொடர்புடைய வீட்டில் சோதனை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜுக்கு தொடர்புடையதாக கூறப்படும் தூத்துக்குடி கணேஷ் நகர் வீட்டில் இருந்து மொத்தம் ரூ.99 லட்சத்து 99 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பிரசாரத்திற்காக அந்த வீட்டில் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பறக்கும் படை நடவடிக்கை
வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை குழுவினர் சோதனை நடத்தி, கணக்கில் வராததாக கூறப்படும் ரூ.62 லட்சத்து 49 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அங்கு இருந்த சுரேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மற்றொரு அறையில் வருமான வரித்துறை சோதனை
இதனிடையே, அதே வீட்டின் மற்றொரு அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் விடியவிடிய சோதனை நடத்தினர். ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வழக்கு பதிவு; நோட்டீஸ் அனுப்ப திட்டம்
தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அமிர்தராஜை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





